-
தினம் ஒரு சிந்தனை
சாலையைக் கடக்கும்போது ஒரு பேருந்து என்னைத் தூக்கி அடித்துவிட்டுச் சென்றது, சாலையோரத்தில் போய் விழுந்தேன். இடது தோளில் உள்ள பந்து கிண்ண மூட்டு இரண்டாக உடைந்தது, அறுவை சிகிச்சை செய்து இரண்டு எவர்சில்வர் தகடுகள், நான்கு எவர்சில்வர் ஆணிகள் போட்டு மீண்டும் என் தோள்பட்டையில் பந்துக் கிண்ன மூட்டைப் பொருத்தினர்.
ஒரு முறை மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பேருந்தில் நான் ஏறினேன், நிற்க முடியவில்லை, ஆம், கையை உயரத் தூக்கி மேலே பிடித்துக்கொள்ள முடியாது. இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
இருவர் உட்காரும் இருக்கையில் ஒருவர் தான் உட்கார்ந்துகொண்டு பக்கத்து இருக்கையில் அவரது குழந்தையை உட்கார வைத்திருந்தார். அவரிடம் சென்று எனக்கு இருக்கை தர முடியுமா என்று கேட்டால் தந்தாலும் தரலாம், இல்லை, முடியாது என்றும் சொல்லலாம்.
ஆகவே ஒரு உத்தியைக் கையாண்டேன்.
அவரின் அருகில் சென்று, "ஐயா, நான் உங்கள் குழந்தையை என் மடியில் வைத்துக் கொள்ளவா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "வேண்டாம், நானே என் மடியில் வைத்துக்கொள்கிறேன் என் குழந்தையை" என்று கூறிவிட்டு அவர் குழந்தையை அவர் மடியில் வைத்துக்கொண்டார். எனக்கு உட்கார இருக்கை கிடைத்தது.
ஒரு இனிய அனுபவம் இது.
ஆமாம், எதிரே பேசுபவரிடம் என்ன சொற்கள் வர வேண்டும் என்பதை நாம் பேசும் சொற்களே தீர்மானிக்கின்றன. வாழ்க்கையில் எல்லாமே பாடம்தான்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
