-
தினம் ஒரு சிந்தனை
புகைப்படக் கருவி
நினைவுக்கும் மணம் உண்டு என்று முன்பொரு முறை எழுதினேன்.
மனதை விடச் சிறந்த புகைப்படக் கருவி வேறில்லை.
ஒரு கோயில் அருகே பூக்களின் மணம், ஓரத்தில் வேர்கடலை வறுக்கும் வாசம், மடைப்பளியிலிருந்து வரும் வாசம், அந்த சன்னிதித் தெருவின் இரு புறமும் அழகாக அடுக்கி வைத்தாற்போல் ஓட்டு வீடுகள், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் தென்னை, வாழை மரங்கள். கோலம் போட்ட வீடுகளின் வாசல், இரு புறமும் திண்ணைகள் உள்ள வீடுகள், இத்தனையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன் கடலூரில் அனுபவித்த காட்சிகள்.
ஆனால் இந்த மணத்தில் ஏதேனும் ஒன்று என் நாசியைத் தாக்கினால் இத்தனை காட்சிகளும் என் கண் முன்னே விரியும். எந்த மணத்தை நுகர்கிறேனோ அதையும் சேர்த்து மற்ற மணங்களும் என் நாசிக்கு வரும். அங்கே கேட்ட பாடல் என் காதில் ஒலிக்கும். யாரொ இருவர் பேசிக்கொண்டே சென்ற காட்சியும், அவர்கள் பேசிக்கொண்ட சொற்களும் காதில் விழும். இத்தனை ஜாலமும் ஒருசேரச் செய்யும் மனதை விடச் சிறந்த சாதனமா புகைப்படக் கருவி?
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
