-
தினம் ஒரு சிந்தனை
குடுமி
சோழியன் குடுமி சும்மாடுமா என்றொரு பழமொழி உள்ளது, ஏனென்றால் தலையில் பாரத்தைத் தூக்க துணியால் சும்மாடு என்ற ஒன்று கட்டிக்கொள்வார்கள். அந்தக் குடுமியும், இந்தச் சும்மாடும் இருக்கும்போது தலையில் வைத்திருக்கும் பாரம் அப்படி இப்படி அசையாமல் சமனமாக நிற்கும், சோழியர்கள் தலையின் நடுப்பக்கதிலே முடியை வளர்த்து அதை முடிந்து குடுமி போல் செய்து வைத்திருப்பார்கள்.
என் தந்தையார் குடுமி வைத்திருந்தார். தலை வழியே போடும் ஒரு வகைச் சொக்காயைப் போட்டுக்கொண்டு தலையில் ஒரு குல்லாயும் போட்டுக்கொள்வார். அது ஒரு கம்பீரம். இன்றும் வைதீகத்தில் இருப்போர் குடுமியுடன் இருப்பதைக் காணலாம். நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையுமே செய்யவில்லை என்பதற்குக் குடுமியும் ஒரு அடையாளம். கபாலத்தில் உச்சி எனப்படும் இடத்தைக் குளிர் தாக்காத வண்ணம் முடியை வளர்த்துக் குடுமி போல் கட்டிக்கொள்வதனால் ஆத்மசக்தி இழப்பைத் தடுக்க முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் முடியைக் காணிக்கை தருதல் என்னும் சடங்காக முடியை மழிப்பர், எதெற்கென்றால் முடியை மழித்தால் சவரக் கத்தியோ, பிளேடோ அந்த முடியின் வேர்வரை மழிக்கும். அப்படி மழிக்கும்போது அந்த முடியின் வேர்களுக்கு பலம் கிடைக்கும். அந்த வேர்களிலிருந்து ஒரு வகை திரவம் சுரக்கும். அந்த திரவம் படும் இடங்களிலும் முடி வளரும், ஆகவே முடி இன்னும் அடர்த்தியாகும்.
உலகின் பலசாலிகளில் பலர் முடியை அதிகமாக வளர்த்து முடிபோட்டிருப்பதைக் காணலாம். இன்றும் ஜப்பானிய மல்யுத்த வீரர்களைக் குடுமியோடு பார்க்கலாம். ஹெர்குலிஸ் என்னும் மாவீரனும் குடுமி வைத்திருந்தான் என்பர். சீனர்களும் குடுமியை அதிக நீளம் வளர்த்து இருப்பதைக் காணலாம். குறிப்பாக குங்ஃபூ, கராத்தே, போன்ற கலைகள் பயிலுவோர் குடுமி வைப்பது சக்தியை சேமிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் ஒரு நாகரீகத்தின் அடையாளமாகவே குடுமி வைக்கிறார்கள் இன்றைய இளஞர்கள்.
ஆகவே முன்னொர்கள் சொன்ன அனைத்திலும் விஞ்ஞானம் உள்ளடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தால் முன்னோர்கள் கூறிய பல செய்திகளை ஆராய்ந்து அவற்றினால் வரும் பலன்களை விஞ்ஞான ரீதியாக நாம் அடைய முடியும் என்பது உண்மை.
அன்புடன்
தமிழ்த்தேனீ
