-
தினம் ஒரு சிந்தனை
தொட்டாற்சிணுங்கி
சாளக்ராமம் வைணவர்களின் புனிதமான நம்பிக்கை. சாளக்ராமங்கள் வைத்து பூஜை செய்வது வைணவர்களின் வழக்கம்.
சாளக்ராமங்களின் இயல்பாகச் சொல்லப்படுபவை ஸ்பர்ச தோஷமற்றவை என்பது மிகவும் விசேஷமான செய்தி. சாளக்ராமத்தையும் துளசியையும் வைத்து வழிபடுவது மிக முக்கியமான ஒரு பூஜாக்ரமம். அப்படிப்பட்ட சாளக்ராமங்கள் இல்லாத வீடுகளில் தொட்டாற்சிணுங்கி என்னும் செடியை சாளக்ராமத்துக்கு ஈடாக வைத்து வணங்குவர் என்பது அருமையான செய்தி. தமிழ்நாட்டிலே பலர் அப்படி வணங்குவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியானால் தொட்டாற்சிணுங்கி என்னும் செடிக்கு சாளக்ராமத்துக்கு உண்டான அத்துணை தகுதிகளும் உண்டு என்று பொருள் கொள்ளலாமா? தொட்டால் கூட தோஷமே இல்லாத சாளக்ராமமும். தொட்டாலே சிணுங்கும் செடியும் எப்படி ஒரே தகுதியை அடைந்தன என்பது யோசிக்க வேண்டிய செய்தி.
தொட்டாற்சிணுங்கி இலைகள் இளைத்த உடலைத் தேற்றும். தொட்டாற்சிணுங்கி வேர் நீர்ச்சுருக்கையும் மூல நோயையும் கட்டுப்படுத்தும், காமத்தைப் பெருக்கச்செய்யும், அதனால் காமவர்த்தினி என்ற பெயரும் உண்டு இந்தச் செடிக்கு.
காயகல்ப மூலிகைகள் ஐந்து, அவை கரிசலாங்கண்னி, தும்பைச்செடி, குப்பைமேனி,செருப்படை, தொட்டாற்சிணுங்கி ஆகியவை.
இப்படிப்பட்ட குணாதிசியங்கள் கொண்ட இந்த மூலிகைக்கும் பக்தியில் திளைக்கும் மாந்தர்கள் சாளக்ராமம் வைத்திருப்பதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றுகிறது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
