-
தினம் ஒரு சிந்தனை
காலாட்டுவோம்
காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டு சாப்பிடலாம் என்று ஒரு சொல்வழக்கு உள்ளது. அந்த சொல்லுக்கு உண்மையான பொருளை நாம் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. காஞ்சீபுரத்தில் மிக முக்கியமாக பரம்பரை பரம்பரையாக நடந்து வரும் தொழில் நெசவுத்தொழில். நெசவு செய்யும் இயந்திரத்தில் கால்வைக்கும் ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அந்த நெசவுத் தொழிலில் இருப்போர் கால் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தாலே அந்த இயந்திரம் இயங்கும். அப்போதுதான் நெசவு செய்ய முடியும். அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வெறுமனே உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு சுகமாக சாப்பிட முடியும் என்று. காஞ்சீபுரத்தில் மட்டுமல்ல எங்கே இருந்தாலும் உழைத்தால்தான் கௌரவமாக உண்ண முடியும். சமீபத்தில் ஒரு கல்யாண சத்திரத்தில் உணவு பறிமாறுவோர் அனைவருமே என்னிடம் வந்து உங்களை நாங்கள் பல திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம் என்றெல்லாம் மகிழ்ச்சியாகக் கூறிவிட்டு அன்போடு பறிமாறினார்கள். அவர்களின் கதையைக் கேட்டு நான் மனம் நொந்தேன். ஆம் அவர்கள் காஞ்சீபுரத்தில் நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்போது நெசவுத் தொழில் நசவுத் தொழிலாக மாறி நசித்துப் போனதால் பிழைப்புத் தேடி இது போன்ற வேலைகளுக்கு வந்ததாகச் சொன்னார்கள். தினமும் இவர்கள் போல் சென்னைக்கு வந்து தொழில் செய்பவர்கள் அனேகம் பேர் இரவு கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள வெளியூர்ப் பேருந்துகளில் தினமும் காஞ்சீபுரம் செல்வதாகக் கூறினர். அவர்கள் கதையைக் கேட்டு மனம் நொந்தேன் விவசாயம், நெசவு போன்ற நம் பாரம்பரியத் தொழில்கள் நசித்துப் போவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கிறோமே நாம். இவைகளுக்குக் காரணமானவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நோக்கி, "ஜாக்கிறதை, நாட்டைச் சீர் செய்யுங்கள்" என்று எச்சரிக்கும் வகையில் விரல் நீட்டிக் கையாட்டுவோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
