-
தினம் ஒரு சிந்தனை
எல்லாமே கணக்குதான்
உலகமே ஒரு கணக்கின் அச்சில்தான் சுழன்றுகொண்டிருக்கிறது, ஒவ்வொரு கிரகமும் ஒரு அச்சில் சுழலுகிறது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுழல்கிறது. அந்த வரையறையைத் தாண்டினால் எல்லாக் கிரகங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலை உருவாகும்.
அனைத்து உயிரினங்களுக்கும் அவை உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சக்திகள் வேண்டும். பிறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சக்திகள் வேண்டும். அந்த அளவை மீறினால் அந்த உயிரினம் ஊனமுற்றதாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ பிறக்கக் கூடும். அதனால் எல்லாமே கணிதம் என்னும் கட்டுக்குள் அடங்கியே சுழல்கின்றன.
வான சாத்திரம், ஜோதிடம், நாழிகை, நக்ஷத்திரக் கணிப்புகள் மூலமாக நம் முன்னோர் இன்று வரை உலகம் எப்படி இயங்கும், எப்போது அமாவாசை, எப்போது பௌர்ணமி, எப்போது கிரகணம், எ[ப்போது ஆண்டு பிறக்கிறது, எப்போது உத்திராயணம், எப்போது தக்ஷிணாயணம் என்றெல்லாம் கணித்திருக்கிறார்கள். விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிய இக்கால கட்டத்திலும், நாம் உபயோகிக்கும் கணிணி கூட எண்களால் தான் இயங்குகிறது. நவீன ரோபோக்களும்,எல்லாவித சாதனங்களும், கணிதத்தின் அடிப்படையிலேதான் உருவாக்கப்படுகின்றன, இயங்குகின்றன. அப்படி இருக்க நாம் கணிதத்தை மதிக்காமல் இருக்கலாமா?
பொதுவாக என் தாயார் ஒரு புத்திமதி சொல்வார்கள், நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் அவரவர் பெயர் எழுதியிருக்கும், நாம் உண்ணும் உணவை அளந்து சரியான அளவு உண்டால் ஆரோக்கியம், அதிகமாக உண்டால் அது கேடு தரும் என்பார்கள். நான் விளக்கம் கேட்டேன், அதற்கு அவர்கள் பெண்கள் பூச்சூடும் வழக்கம் உள்ளது, அவர்கள் அதிகமான அளவிலே பூவைச் சூடினால் அந்தப் பூவை வைத்துக்கொள்ளும் பாக்கியத்தை அவர்கள் குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். மஞ்சள் பூசுவார்கள், அந்த மஞ்சளை அதிகம் உபயோகிக்காமல் அளந்து உபயோகித்தால் அதிக நாட்கள் உபயோகிக்கும்படி சுமங்கலியாக வாழ்கிறார்கள் என்றார்.
நடைமுறையில் சிந்தித்தால் மிக எளிதாக ஒரு பெரிய தத்துவத்தை அவர்கள் எனக்கு உணர்த்தியது புரிந்தது.
ஆகவே கணிதத்தை மதிப்போம், பெரியவர்கள் கூறும் சொற்களை மதிப்போம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
