-
தினம் ஒரு சிந்தனை
கொக்கு
”ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்வாடியிருக்குமாம் கொக்கு”
ஆமாம் ஆற்றிலோ குளத்திலோ அமர்ந்திருக்கும் கொக்கு ஒற்றைக் கால் தவம் செய்து கொண்டிருக்கும் அந்தக் கொக்கு செய்யும் தவம் என்ன தெரியுமா? ஏன் அப்படி தவம் செய்கிறது தெரியுமா?
இந்த உலகத்தில் உள்ள அத்துணை ஜீவராசிகளின் முதல் தேவை வயிற்றுக்கு உணவு. அந்த வயிற்றுக்கு உணவு கிடைக்கவில்லையெனில் உயிர் வாழ்வது கடினம், ஆகவே முதல் தேடலே உணவுதானே!
ஆகவேதான் தனி ஒரு மனிதருக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் மஹாகவி பாரதியார்.
ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக் கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்கு கொழுத்த மீன் வரும் வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்.
அது போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் ஐந்தறிவு கொண்ட கொக்கே இப்படி அறிவுத் தவம் செய்கிறதே, ஆறரிவு கொண்ட மனிதர்களாகிய நாம் முயற்சி என்னும் தவத்தை மேற்கொண்டு நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த ஒற்றைக்கால் தவம் செய்யும் கொக்கு நமக்கு உணர்த்துகிறது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
