-
தினம் ஒரு சிந்தனை
வாழும் முறை
" வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கைஎரிமுன்னர் வைத்தூறு போல் கெடும்"
உண்மை, கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை விடுத்து இனி இருக்கும் நாட்களில் எப்படி இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று யோசிப்பது பலனளிக்கும், தன்னிரக்கம் ஆளைக் கொல்லும் வியாதி, அது தேவையே இல்லை,
”மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும் மாறிவிடாது சமூதாயம்” என்னும் வரிகள் நினைவுக்கு வருகிறது.
ராமாயண வைராக்கியம், ப்ரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் மூன்றுமே கண நேரத்துக்கு மட்டுமே இருக்கும் நீர்க் குமிழிகள். ஆத்திகரோ, நாத்திகரோ ரத்தம் சுண்டி இயலாமை வரும்போது ஆத்திகம், நாத்திகம் என்னும் இரு நிலைகளைக் கடந்து பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என்று தேடத் தொடங்குகிறார்கள். கடைசி நேரத்தில் ஆத்திகமும், நாத்திகமும் எதுவுமே உதவுவதில்லை. “காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று ஏற்கெனவே சொல்லிவைத்துப் போயிருக்கிறார்கள்.
ஆகவே, மரனத்தைப் பற்றி யோசிப்பதைக் கட்டிலும் இருக்கும் வரை யாருக்கேனும் உதவி செய்யும் மனப்பான்மையோடு வாழ்ந்தால் இறக்கும் நேரத்தில் ஒரு தெளிவு வரும்.
நாம் யாருக்கும் த்ரோகம் செய்யவில்லை, முடிந்த அளவு உதவியிருக்கிறோம்,என்னும் எண்ணம் ஒன்றினால்தான் மரண நேரத்தில் நமக்கு சற்றேனும் ஆறுதல் கிடைக்கும் என்பது என் எண்ணம்.
ஆகவே வாழ்வோம், இறக்கும் வரை வாழ்வோம், இறக்கும் வரை என்று நான் சொல்வது நினைவு தப்பும் கடைசி வினாடி வரைக்கும் பொருந்தும்.
அதற்கு நாம் யாருக்கும் த்ரோகம் செய்யவில்லை, முடிந்த அளவு உதவியிருக்கிறோம் என்னும் எண்ணம் மட்டுமே உதவும். ஆகவே த்ரோக சிந்தனையில்லாமல், உதவும் மனப்பான்மையோடு வாழ்தலே நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
