-
தினம் ஒரு சிந்தனை
மந்திரக்கோல்
மந்திர ஜால வித்தை செய்பவர்களும், குறி சொல்பவர்களும் இரு புறமும் பூண் போட்ட ஒரு கோலைக் கையில் வைத்திருப்பர். அது போன்ற ஒரு மந்திரக் கோல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சிறுவயதில் நினைத்ததுண்டு.மந்திரங்கால் மதி முக்கால் என்று சொல்வார்கள். உண்மைதான், மந்திரக் கோல் வெறும் காட்சிப் பொருளே. அங்கே மந்திரவாதியின் மனமும் மூளையும் தானே செய்லபடுகின்றன.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கனகசபாபதி செட்டியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணக்கு வகுப்பு எடுப்பார். அவர் கையில் நன்றாகத்ய் தேய்த்து மழுமழுவென்று இருக்கும் இரு கோல்களை வைத்திருப்பார். ஒன்று சிறியதாக இருக்கும், இன்னொன்று சற்றே நீளமாக இருக்கும். அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது கரும்பலகையில் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது யாராவது மாணவர்கள் வகுப்பைக் கவனிப்பதை விடுத்துக் குறும்பு செய்தால் திரும்பிப் பார்க்காமலே அந்தச் சிறு கோலை வீசுவார். அது சரியாகக் குறும்பு செய்யும் மாணவனை வந்து தாக்கும். "என்னடா, சின்னவன் வந்து அடிச்சானா? அதுக்குத்தான் ஒழுங்கா பாடத்தைக் கவனிக்கணும்கறது" என்பார். அந்த மந்திரக் கோலுக்கு பயந்து பல பிள்ளைகள் அவர் வகுப்பில் குறும்பு செய்வதை விட்டுவிட்டனர். அந்தச் செயல் சரியா, தவறா என்னும் விவாதத்துக்கு நான் வரவில்லை.
மந்திரக் கோல்களின் பல வகைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுவதே என் நோக்கம். கண்ணுக்குத் தெரியாத பல மந்திரக் கோல்கள் உலகத்தில் உண்டு. சரியான நேரத்தில் நம்மை எச்சரிக்கும் நம் உள் உணர்வுகள் கூட அது போன்ற ஒரு மந்திரக் கோலே.
அனேகமாக சன்யாசிகள், மகான்கள் போன்றோர் கையில் ஒரு தண்டம் எனப்படும் ஒரு குச்சியை வைத்திருப்பர். அந்த தண்டம் என்பது என்னவென்றால் அந்த தண்டத்தை விட்டுவிட்டால் எந்தப் பிடிப்புமின்றி நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து விடும். அது போன்று ஞானத்தை அடைந்தவர்கள் எந்தப் பற்றுமின்றி பற்றற்று இருக்க நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து இறைவனின் பாத கமலத்தை அடைய முயலுவர் என்பதைக் காட்டவே அந்த தண்டம் எனப்படும் மந்திரக் கோலைக் கையில் வைத்திருப்பர்.
மனிதர்களைப் பற்றற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் உபாயங்களைக் கற்றுக்கொண்டு மகான்கள் கையில் வைத்திருக்கும் ஒரு மந்திரக் கோல் தண்டம் என்பது.
அதே போல இசையமைப்பாளர்கள் கையில் ஒரு சிறு கோலை வைத்திருப்பர். அந்தக் கோலை அவர்கள் அசைக்கும் வித்த்தை வைத்து இசைப்பவர்கள் கீழ் ஸ்தாதியிலோ, அல்லது மேல் ஸ்தாதியிலோ இசைப்பர். இது இசையமைப்பாளரின் கையில் இருக்கும் மந்திரக் கோல்.
அதே போல் சர்கஸ் கூடாரங்களில் புலியையும், சிங்கங்களையும், யானை போன்ற மிருகங்களையும் ஆட்டுவிக்கும் சர்க்கஸ் வித்தை செய்பவர் கையில் ஒரு கோல் இருக்கும். அந்தக் கோலின் முனையிலே காந்தம் வைத்திருப்பர் என்று சொல்வார்கள். அந்தக் காந்தம் பற்களிலே பட்டால் ஒரு வித அதிர்ச்சியை மிருகங்களுக்கு ஏற்படுத்தும். அதனால் அந்தக் கோலை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்கின்றன கொடும் மிருகங்களும்.
ஆகவே மனிதனோ மிருகமோ கையில் மந்திரக் கோல் வைத்திருப்பவர்களிடமே கட்டுப்படுகின்றனர்.
ஒரு வகையில் பார்த்தால் மிருகங்களுக்கு இது சரி ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் கட்டுப்பாடு என்னும் மந்திரக் கோல் இருந்தால் ஒரு முறை சொல்லியவுடன், அல்லது யாரும் சொல்லாமலே அவர்களாகவே நல்ல வழியில் நடப்பர். அப்படித்தான் சுயக் கட்டுப்பாடு என்னும் மந்திரக்கோலை நாமே வைத்துக்கொண்டு நம் மனதில் மிருகங்களுக்கு ஏற்படுவது போன்ற தீய உணர்வுகள் ஏற்படும் நேரங்களில் நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொண்டு நல்லுணர்வுக்குத் திரும்ப வேண்டும்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
