-
தினம் ஒரு சிந்தனை
நாளை பார்க்கலாம்
ஒரு வயற்காட்டில் கதிர் முற்றி நெல்மணிகள் நன்கு விளைந்து இருந்த கதிர்களுக்கு இடையே ஒரு குருவி கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தது,அங்கே வந்த அந்த நிலத்தின் உரிமையாளர் தன் மனைவியிடம் நாளைக்குக் கதிர் அறுவடை செய்ய ஆட்கள் வருவதாக ஏற்பாடு செய்திருப்பதாகவும், நாளை அவர்கள் வந்து கதிர் அறுப்பார்கள் என்றும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் குருவி தன் கணவனிடம் நாம் இன்று இந்த வயலிலிருந்து வேறு இடத்துக்குப் போய்விடலாம், அப்போதுதான் நம் குட்டிகளைக் காப்பாற்ற முடியும் என்று கூறியது. அதற்கு அந்த ஆண்குருவி வேண்டாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியது. மறு நாள் வேலைக்கு யாரும் வரவில்லை. நிலத்தின் உரிமையாளர் தினமும் வருவதும் போவதுமாக இருந்தார், ஆனால் வேலையாட்கள் வரவில்லை.
ஒரு நாள் அந்த நிலத்தின் உரிமையாளர் தன் மனைவியிடம் இனி யாரையும் எதிர்பார்க்காமல் நாமே நிலத்தில் உள்ள கதிர்களை அறுத்து, நெல்லை அடித்து, தூற்றி, எல்லா வேலைகளையும் நாமே செய்து விடலாம் என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண் குருவி பெண் குருவியிடம் இன்றே நாம் இந்த நிலத்தை விட்டுப் போய்விடலாம், என்றது.
பெண் குருவி தினமும் நான் சொல்லும் போதெல்லாம் வேண்டாம், நாளைக்குப் போகலாம் என்று கூறினீர்களே, இன்று ஏன் போய்விடலாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த ஆண்குருவி இந்த நிலத்தின் உரிமையாளர் அடுத்தவரை நம்பாமல் தன் கையை, தன் உழைப்பை நம்ப ஆரம்பித்து விட்டார். ஆகவே நாளைக்கு நிச்சயம் வேலை நடக்கும். அதனால்தான் இன்றே வேறு இடம் சென்று விடலாம் என்று முடிவெடுத்தேன் என்றது.
அதனால் நாமும் இன்றிலிருந்து அடுத்தவர் கையை, உதவியை எதிர்பாராமல் நாமே நம் வேலைகளைச் செய்துகொள்ளத் தயாராவோமா?
அன்புடன்
தமிழ்த்தேனீ
