-
தினம் ஒரு சிந்தனை
இயற்கை தரும் பாடம்
நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் இயற்கை நமக்கு நிறையப் பாடங்கள் கற்றுத்தருகின்றது, ஆனால் நாம் பலவற்றைக் கூர்ந்து கவனியாமல், இயற்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் பல பொன்னான தருணங்களை நம்மை அறியாமலே இழக்கிறோம்.உதாரணமாக உலகம் தோன்றி இன்றுவரை இயற்கை தன்னுடைய சுழற்சியை என்றாவது நிறுத்தி இருக்கிறதா? இல்லவே இல்லை. இயற்கையில் சில மாறுதல்கள் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கின்றனவே தவிர, அது தன் கடமையிலிருந்து தவறுவதே இல்லை. நம் வீட்டில் உள்ள கடிகாரம் ஒட மறந்தாலும், காலம் தன் சுழற்சியை நிறுத்துவதே இல்லை. இயற்கை மணித்துளிகள் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு மணித்துளியும் கழியக் கழிய அடுத்த மணித்துளிகள் வந்துகொண்டே இருக்கின்றன, அவை யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. இயற்கை கடமை தவறாமல் இருப்பதனால்தான் இன்றளவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சற்றே நினைத்துப் பாருங்கள் நாம் அடிக்கடி சொல்கிறோமே, "அடேடே மறந்துட்டேன்" என்று.,
அப்படி இயற்கை ஒரே ஒரு முறை மறந்தாலும் போதும் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு அனைத்து கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு மொத்த கிரகங்களும் சிதறிப்போகும், அப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தாலே மனம் துணுக்குறுகிறது. நம் கடமைகளை நாம் மறப்பதால் அவதிப்படும் அடுத்தவர் நிலமையை யோசித்துப் பாருங்கள்.
நாம் கடமை தவறுவதால் எவ்வளவு இழப்புகளுக்கு ஆளாகிறார்கள் மற்றவர்கள்? நாம் உதவி செய்யாவிடினும் பரவாயில்லை, ஆனால் யாரையும் துன்புறுத்தக் கூடாது அல்லவா?
ஆகவே இன்றிலிருந்தாவது நம் கடமைகளை மறக்காமல் செய்ய வேண்டும் என்று உறுதி பூணுவோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
