-
தினம் ஒரு சிந்தனை
உறவுகள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது, ஆனால் தற்போதைய காலகட்டத்தில் உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவருமே ஏதோ ஒரு சுயநலத்துக்கு ஆட்பட்டு, வேறு வழியில்லாமல் உறவு கொண்டாடுகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை.ஆகவே, உறவுக்காரர்களாயினும், நட்பாயினும், யாராக இருந்தாலும் தீர ஆராய்ந்தே நம் குறைகளையோ, உயர்வையோ பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆம், தனி மனித ஒழுக்கம் என்பது இப்போதைய காலகட்டத்தில் இல்லவே இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அனைவருமே நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நேர்மை, நீதி, நியாயம், மனசாட்சி, தெய்வம் ஆகிய அனைதையும் புறந்தள்ளிவிட்டு வாழ்வில் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக நாம் அனைவருமே மாறிவிட்டோம். பணம் இல்லாமல் வாழ்வில் எதுவும் கிடைக்காது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் நேர்மை இல்லாவிடின் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர்கள் மீண்டும் பாதாளத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மை.
ஆமாம், உண்மையான அன்புக்கும், பாசத்துக்கும், ஏங்கும் பல கோடீஸ்வரர்களை சந்திக்கும்போது இது புலனாகிறது. கோடி கோடியாக பணம் இருப்பினும் நிம்மதி இவர்களுக்குக் கிடைப்பதில்லை,
ஆகவே, வாழ்வின் அடிப்படையாக மனித நேயத்தையும், நேர்மையையும் கடைப்பிடிப்போம் என்னும் கொள்கையை மீண்டும் கைக்கொள்ளுவோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
