சிந்தனை செய் மனமே! தினமே
சிந்தனை 7:
இது வரையில் என் உள் உணர்வுகளை மதித்தே என் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொண்டுகொண்டு வந்திருக்கிறேன், ஏனென்றால் உள் உணர்வு என்பதே நம் வாழ்க்கையை நாமே செப்பனிட்டுக் கொள்ள இறைவனால் நமக்களிக்கப்பட்ட வரப்ரசாதம்.
மிக எளிய முறையில் சொல்வதானால் நான் என் இள வயதில், ஓடும் பேருந்திலிருந்து அனாயாசமாக இறங்குவதை ஒரு வாலிப நாகரீகமாக ஏற்படுத்திக் கொண்டு ஒரு கதாநாயக உருவகத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றவன். அப்போதெல்லாம் பல முறை அப்படியே இறங்குவேன், ஆனால் பேருந்து மிக மெதுவாக ஓடும் போதும் என் உள்ளுணர்வு வேண்டாம் என்று எச்சரிக்கும் குரல் கொடுத்தால் இறங்க மாட்டேன்.
அந்த உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த காலையும் பின் வைக்கத் தயங்கியதில்லை, அப்படி மதிக்காது ஒரு முறை அலட்ஷியமாக காலை எடுத்து வைத்ததன் பலன் நான் கீழே விழுந்து என் இடது தோள்பட்டையின் மூட்டு எலும்பு உடைந்திருக்கிறது. இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எடுத்துக் கொண்டால் பரவாயில்லை, ஆனால் பல முக்கியமான நேரங்களில் நம்மை இந்த உள்ளுணர்வு எச்சரிக்கிறது.
அப்போது இந்த உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். மொத்தத்தில் இந்த உள்ளுணர்வு மனசாட்சி, இறைவன் என்று எப்படிப் பொருள் கொண்டாலும், அதை மதிக்க வேண்டியதே.
என் வாழ்க்கையில் பிறகு இந்த உள்ளுணர்ச்சியை மதித்து என் வாழ்வை செம்மைப் படுத்திக் கொண்டவன் நான்.
ஆகவே உள்ளுணர்வு என்பதே இறைவன், அதை மதிக்கக் கற்றுக் கொண்டால் எல்லாம் நலமாகும்.


