சிந்தனை செய் மனமே! தினமே
சிந்தனை 4:
அன்புள்ள நண்பர்களே,
சிறு குழந்தைகள் என்று நாம் யாரையும் அலட்ஷியமாக நினைக்க முடியாது. திரு ஆகிராவுடன் பேசிக்கொண்டிருந்த போது, குழந்தைகள் நம்மை விட அறிவாளிகள் என்று அவர் கூறினார். எனக்கும் அந்தக் கருத்தில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த என்னுடைய பேரன் ஹரிப்ரஸாத், "தாத்தா எங்க ஸ்கூல்ல ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு நான் பதில் எழுதி இருக்கேன், படிச்சுப் பாக்கறேளா?"ன்னு கேட்டான். நானும் அவன் எழுதியதைப் படித்தேன். சிறுவனானாலும் அவனுடைய பாணியில் அவன் எழுதியிருந்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம் நாட்டை எப்படி அமைதியான நாடாக மாற்ற முடியும்? என்று அவர்கள் பள்ளியில் கேட்ட வினாவுக்கு என் பேரன் மாஸ்டர் ஹரிப்ரஸாத் பதில் எழுதுகையில்
1. உலக சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டும். 2. தரமான கல்வி அளிக்க வேண்டும். 3. தங்கம் போன்ற உலோகங்களுக்காக பூமியைத் தோண்டாமல் இருக்க வேண்டும். 4. யாரிடமும் சண்டை போடாமல் இருக்க வேண்டும். 5. தரக் குறைவான சொற்களை பேசாமல் இருக்க வேண்டும். 6. நாம் அமைதியான மன நிலையில் இருக்க வேண்டும். 7. நாம் மரங்களை, இயற்கையை அழிக்கக் கூடாது. அப்படி அழித்தால், மழைபெய்யாது, காற்று கிடைக்காது என்று எழுதி இருக்கிறான். மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படி அனைத்து சிறுவர்களையும் அழைத்து, அவர்களுக்கு ஒரு கேள்வியைக் கொடுத்து விட்டு, அதற்கு பதில் எழுதச் சொன்னாலே நிறைய செய்திகளை நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
குழந்தைகளை ஊக்குவிப்போம், நாமும் கற்றுக் கொள்வோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். நாம் கற்றுக்கொள்ள அவர்களிடம் அனேக நல்ல செய்திகள் இருக்கின்றன. இப்படி நாம் அவர்களை மதித்தால், அவர்களும் அனைவரையும் மதிக்க கற்றுக்கொள்வர். பண்புகள் கற்றுக் கொடுப்போம், கற்றுக் கொள்வோம்.


