சிந்தனை செய் மனமே! தினமே
சிந்தனை 1:
தினமும் நாம் புலன்களின் உறக்கத்திலிருந்து விழிக்கிறோம். ஆனால் நாம் அறிவு உறக்கத்திலிருந்து விழிக்கிறோமா என்பதே இன்றைய சிந்தனை.
ஆம், புலன்களின் விழிப்பை விட அறிவு விழிப்புணர்வு மிக முக்கியம், அன்றாடம் பலவித அனுபவங்களை அடைகிறோம் என்பது பெருமையல்ல, அந்த அனுபவங்களீன். வாயிலாக நாம் அறிவு விழிப்புணர்வு அடைகிறோமா என்பதே முக்கியமாக நாம் உணர வேண்டும்.
”ஆன்றோர் செரித்த அறு சுவையின்
வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும்
அதுவே நமக்கு முதல் ஈடு”
ஆகவே நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் நமக்கு ஏற்படும் அனுபவத்தின் வெளிப்பாடாக கிடைக்கும் அறிவு விழிப்பு பற்றி எழுலாமே.
சிந்தனை 2:
நாள் என்ன செய்யும்
வழக்கம் போல் காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டு காலை தினசரியைப் பிரித்து இன்று நாள் எப்படி இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன்.
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே,
இன்று நீங்கள் நினைத்த காரியம் சுலபமாக முடியும், நீங்களே எதிர்பாராத அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவைத் தட்டும் நாள் என்று எழுதியிருந்தார்கள். ஆமாம் தினசரியில் இவர்கள் எழுதும் ஜ்யோதிடப் பகுதி பக்கங்களை நிரப்பவா, அல்லது நம்மை ஊக்குவிக்கவா, யோசித்துப் பார்த்தால் பக்கங்களை நிரப்பவே என்று தோன்றுகிறது.
”நாள் என் செயும் பிறந்த கோள் என் செயும்”
பலனை எதிர் பாராமல் கடமைகளை ஒழுங்காக செய்தால்அல்லவோ பலன் கிடைக்கும். நாம் நம் மனதை சுத்தமாக நல்ல எண்ணங்களுடன் வைத்துக்கொண்டு நம்முடைய கடமைகளை மறக்காமல் ஒழுங்காக செய்வோமானால் நல்ல பலன் நிச்சயம். அதை விடுத்து நம்மை நம்பாமல் பொதுவாக ஏனோதானோ என்று எழுதும் ஜ்யோதிடங்களை நம்பலாமா?
சிந்தனை 3:
எழுத்து என்பது பல முனைக் கூர் கொண்ட ஒரு ஆயுதம், எழுத்தாளி ஏந்தும் எழுது கோல் அறிவுக் கதவைத் திறக்கும் ஆயுதம், கவனமாக கையாள வேண்டும். இல்லையேல் தவறான விளைவுகள் ஏற்படுத்தும். ஒரு பத்திரிகையில் ஒரு பெரிய மனிதர் இறந்து விட்டார் என்று தவறாக செய்தி அளித்துவிட்டனர். அந்தப் பெரிய மனிதர் கோபமாக, "ஏன் இப்படித் தவறான செய்தியைப் போட்டீர்கள்? நான் உயிரோடு இருக்கிறேனே" என்றார்.
அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மறு நாள் செய்தி வெளியிட்டனர், "அந்தப் பெரிய மனிதர் பேரைப் போட்டு இவர் இறந்து விட்டார் என்று தவறாக செய்தி அளித்து விட்டோம். தவறுக்கு மன்னிக்கவும். அவர் இன்னும் இறக்கவில்லை, வருந்துகிறோம்.
அடிக்கடி தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்பது மிகவும் தவறான் செயல். ஒரு முறை செய்த தவறை மறு முறை செய்யாமலிருத்தல் நலம். அதை விட தவறு செய்யாமலிருத்தல் நலம். அப்படித் தவறு செய்ய நேர்ந்தால் அவற்றிலிருந்து பாடம் கற்க.


