-
தேர்தல் வருகிறது
சுதந்திரம் வாங்கி 63 வருடங்கள் ஆயின. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இதுவரை அனேகம் தேர்தல்கள் வந்திருக்கின்றன. நாமும் தளராமல் வாக்களித்திருக்கிறோம். கண்ட பலன் என்ன?
இது வரை தேர்தலில் மக்களுக்கு வேட்பாளர்கள் அளித்த ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றி உள்ளனரா வேட்பாளர்கள்? அல்லது இது வரை வாக்குறுதியை நிறைவேற்றாத வாக்காளர்களை மக்கள் தண்டித்திருக்கின்றனரா? நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வாக்குறுதியை நிறைவேற்றாத வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் அவர்களைப் பதவி விலகச் செய்தலே அவர்களுக்கு நாம் அளிக்கும் தண்டனை என்று.
இது எப்படி இருக்கிறது என்றால் வீட்டில் திருடியவனை அடுத்த முறை திருடாமல் இருக்க அந்த வீட்டை விட்டு ஓட்டுதலைப் போல. ஏற்கெனவே திருடியதற்கு என்ன தண்டனை அளித்தோம்? இனியும் திருடாமல் இருக்க என்ன வழி செய்தோம்? ஒன்றுமில்லை. ஏற்கெனவே நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நமக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல், நாட்டின் செல்வத்தையெல்லாம் சுறண்டி தன் ஒருவனுக்கே நாடு சொந்தம் என்று நினைக்கும் அளவுக்கு சொத்துக்களை குவித்து, நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தையும் தங்கள் வீட்டிலே கொண்டு போய்ப் பதுக்கி வைத்திருப்போருக்கு நாம் என்ன தண்டனை வழங்கினோம்? ஒன்றுமில்லை.
மாறாக நாம் அளித்த வாக்குகளால் பதவிக்கு வந்தவரை, அவர் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கும் உரிமையைக் கூட மறந்து போய்விட்டோம், தட்டிக் கேட்க பயப்படும் அளவுக்கு அவர்கள் அசுரனைப் போல் வளர்ந்து, அடியாட்களை வைத்துக்கொண்டு தட்டிக்கேட்போரை அடித்து, உதைத்து, கொலை செய்து, அராஜகம் செய்கிறார்கள்.
நம்மால், நமக்காக, நம் நாட்டை ஆள, நமக்கு நன்மை செய்ய, நாட்டிற்கு நன்மை செய்ய, நாட்டை முன்னேற்ற, நாம் அளித்த நம் வாக்குகளை வாங்கிக்கொண்டு பதவிக்கு வந்தவர்கள், நாட்டிற்கும், நமக்கும் த்ரோகம் செய்கிறர்கள். நம்மிடம் கையேந்தி நாம் இட்ட பிச்சையினால் வளர்ந்து, இன்று நம்மை ஆள வந்தவர்கள் நம்மையே அழிக்கும் அளவுக்கு அராஜக அரசியல் செய்கிறர்கள். இது எப்போது நமக்குப் புரியும்?
நாம் அவர்களுக்கு அளித்த ”வாக்கு” நம் உரிமை, நம் சொத்து, இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் இயற்கையாக, சட்ட பூர்வமாக, நம்முடைய பொன்னானா நேரத்தை ஒதுக்கி, நம் அலுவல்களை ஒதுக்கி வைத்து, நம் உடம்பை உழைப்புக்குள்ளாக்கி, நம் வாகனத்தை உபயோகித்து, நாம் வரிசையில் வெய்யிலிலும், மழையிலும் நின்று நமக்கு சொந்தமான அந்த ”வாக்கை” இலவசமாக அவர்களுக்கு அளித்து அவர்களைப் பதவியில் அமர்த்தினால் அவர்கள் அந்த நன்றியை மறந்து அவர்க்கும் அவர்தம் சுற்றத்தாருக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும், நம் சொத்தை, நம் நாட்டின் ஒட்டுமொத்த மூலதனத்தை, வளத்தை ஒதுக்கி ஊழல் புரிகின்றனர். நம் சொத்தை அழித்து, சுறண்டி, நம்மை உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, மனிதர்களின் ஜீவாதாரமான அடிப்படை உரிமைகளைக்கூட நமக்குகு செய்து கொடுக்காமல், நம்மையே அழிக்கும் விஷக் கிருமிகளாய் வளர்ந்து இருக்கும் இவர்களுக்கு நாம் என்ன தண்டனை கொடுத்தோம். ஒன்றுமில்லை.
நாம் நடக்க சரியான, மேடு பள்ளம் இல்லாத சாலைகள் உள்ளனவா? நாம் உண்ண கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் உள்ளனவா? நாம்குடிக்க சுத்தமான தண்ணீர் இருக்கிறதா? நாம் சுவாசிக்க சுத்தமான காற்று இருக்கிறதா? நம் குழந்தைகள் படிக்க தரமான கல்வி இருக்கிறதா? நம் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் பத்திரமாக வீடு திரும்பும் பாதுகாப்பு இருக்கிறதா? நாம் வேலைக்கு சென்றால் பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதா? நாம் வேலைக்கு சென்றிருக்கும்போது வீட்டிலுள்ள நம் மனைவி, நம் பிள்ளைகள் திருடர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் போன்றவைகளால் ஏற்படும் பயமின்றி பாதுகாப்புடன் இருக்க முடிகிறதா? சாலைகளில் சாக்கடைகளில் கால் வைக்காமல் நாம் நடக்க முடிகிறதா?
இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் ஆனல் எதுவுமே இல்லை, இல்லை, இல்லவே இல்லை எனபதுதான் கசப்பான உண்மை.
இவ்வளவும் இயல்பாகவே அரசங்கம், அதாவது நம்மை ஆள்வோர் செய்து தரவேண்டிய கடமை. ஆனால் நாம் வரிப்பணம் செலுத்தியும் அவற்றையும் கொள்ளையடித்து சுகபோக வாழ்வு வாழும் இந்த அரசியல்வாதிகள் நமக்கு வேண்டிய எந்த வசதிகளையும் செய்துதராமல் வாய்ஜாலம் செய்தே நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நாமும் கையாலாகாத நடைப்பிணமாய் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்மை மதித்து நம் வீட்டுவாசலில் ”வாக்கு” சேகரிக்க மட்டுமே வரும் இவர்களுக்கு நெற்றியிலே திலகமிட்டு, ஆரத்தி சுற்றி, இவர்கள் வெற்றிக்காக பாடுபட்டு, எல்லாம் செய்கிறோமே.
நாம் நம்மைப் பற்றியும், நம் நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல் நம் முன்னோர்கள் குறுதி சிந்தி நமக்காக வங்கிக்கொடுத்த சுதந்திரத்தின் அருமை புரியாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு அடிமைகளாய் வாழப்போகிறோம்?
”அன்று அன்னியன் நம்மை ஆண்டுவந்தான்
அடிமைகளாய் நாம் மாண்டு வந்தோம்
அடிமைத் தளையிலிருந்து மீண்டு வந்தோம்
ஆயினும் இன்று நம்மவரே நம்மை ஆளுகின்றார்
அடிமைகளாய் இன்றும் வாழுகிறோம்
அன்று மீண்டோம் அன்னியரிடமிருந்து
என்று மீள்வோம் நம்மவரிடமிருந்து?”
சிந்திப்போம் வாரீர்!
அன்புடன்
தமிழ்த்தேனீ
