-
இனிய தீபாவளி 2010
நரகாசுரன் வதமும் அதன் காரணமாக தீபாவளிப் பண்டிகையை இன்று வரை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
நரகாசுரன் என்பவன் யார் தெரியுமா? பூமித்தாயின் புதல்வன்.
லோக மாதா கூட அனுக்ரஹம் செய்யாத அளவுக்குப் பாவங்களைப் புரிந்த நரகாசுரனை அழிக்க எண்ணம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கருடன்மேல் சத்யபாமா சகிதமாக வந்து நரகாசுரன் ஆண்டுவந்த பிராக்ஜோதிஷ நகரத்தை அடைந்தார். ஆமாம் கூடவே தாயாரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சம்ஹாரம் செய்தது நரகாசுரனைத்தான்.
ஸ்ரீகிருஷ்ணன் போருக்கு ஆயத்தமாக சங்கநாதம் முழங்கினார், ப்ராக்ஜோதிஷ நகரத்தின் கோட்டையின் சுவர்களைத் தன் கதாயுதத்தால் தகர்த்து எறிந்தார். முரன் என்னும் அசுரன் சூலமேந்திக் கிருஷ்ணன்மேல் பாய்ந்தான். அவன் சூலத்தையும் முறித்து அவன் தலையையும் அறுத்தார் கிருஷ்ணன். பல ஆயுதங்களை கிருஷ்ணன்மேல் ப்ரயோகித்த நரகாசுரனை அத்துணை ஆயுதங்களையும் தகர்த்து எறிந்து தன்னுடைய சக்ராயுதத்தால் நரகாசுரனை இரண்டாகப் பிளந்து வீழ்த்தினார் கிருஷ்ணபகவான்.
நல்லவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல புரிந்து அவர்களைத் துன்புறுத்திய நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த இந்த நாளைத்தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
ஆமாம், அரக்க குணத்தோரை அழித்து நல்ல குணமுள்ளவர்களைக் கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி. இந்த நந்நாளில் விடியற்காலையில் எழுந்து கங்காஸ்னானம் செய்து, புத்தாடைகள் அணிந்து, மனதில் மகிழ்ச்சியுடன் இனி வரும் நாளெல்லாம் நமக்கு வாழ்வில் ஓளியேற்றப்போகும் நாட்களே என்னும் நல்ல எண்ணத்துடன் இறைவனை நமஸ்காரம் செய்து, பெரியவர்களின் ஆசியோடு நாம் இருளை அகற்றும் ஒளியை நம் இல்லங்களில் விளக்காய் ஏற்றி, ஒளியை அளிக்கக் கூடிய மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், தரைசக்கரம், போன்ற ஓளிகூட்டும் பட்டாசுகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
