சின்னத் தொலைபேசி
பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் சின்னத் தொலைபேசியை அனுமதிப்பதில்லை.என்ன காரணம் என்று ஆராய்ந்தால், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சின்னத் தொலைபேசியை வைத்துக்கொண்டு வகுப்புகள் நடக்கும் போது அதைக் கவனியாமல் நண்பர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த சின்னத் தொலைபேசி இருப்பதால் அதில் தேவையில்லாத வக்கிரமான படங்களையும், செய்திகளையும் அளித்து இளைஞர்கள், மாணவிகள் போன்றவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள், மனதைக் கெடுக்கிறார்கள், மற்றும் வகுப்பு நடக்கும் போது மாறிமாறி சின்னத் தொலைபேசி சிணுங்குவதால் கவனம் சிதறுகிரது என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள்.
எல்லாம் சரியான காரணங்கள்தான் என்று ஒப்புக்கொண்டாலும் சின்னத் தொலைபேசியின் முக்கியமான பயன் என்ன என்று பார்த்தால் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசரச் செய்திகள் அல்லது அவசியச் செய்திகளை பகிர்ந்து கொள்ளத்தான் என்பது. ஆனால் நாம் அனைவருமே அதை விடுத்து சின்னத் தொலைபேசியை பாடல்கள் கேட்பதற்கும், தேவையில்லாத, ஆபத்து விளைவிக்கக் கூடிய செய்திகளைப் பறிமாறிக்கொள்வதற்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது உண்மை. பாடல்கல் கேட்பது தவறா என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது, பாடல்கள் கேட்பது தவறில்லை, ஆனால் அதற்கென்று சில நேரங்கள் ஒதுக்கி அப்போது கேட்டால் தவறில்லை. முக்கியமான நேரங்களில் அவற்றைக் கவனியாமல் பாடல்கள் கேட்பது தவறு என்று சொல்லுகிறேன். அதேபோல சின்னத் தொலைபேசியை அவசர, அவசிய செய்திப் பறிமாற்றங்களுக்கு மட்டும் உபயோகித்தால் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பள்ளிகள், கல்லூரிகள் நடத்துபவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்ய விடாமல் இந்தச் சின்னத் தொலைபேசி இருப்பதால்தான் அவர்கள் தடை செய்கிறார்கள்.
நமக்கு சின்னத் தொலைபேசி மிகவும் அவசியமான ஒன்று. பிள்ளைகளை, கணவரை படிப்பதற்கோ, அலுவலகத்துக்கோ அனுப்பிவிட்டு அவர்கள் வீட்டுக்கு வரும் வரை நிம்மதியில்லாமல் இருக்கும் வீட்டிலுள்லோர் அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று அறியத்தான் சின்னத் தொலைபேசிப் பயன்பாடு உபயோகப்பட வேண்டும், முக்கியமான விவரங்களக் கூட அறிய முடியாமல் சின்னத் தொலைபேசிய கொண்டு வருவதற்குத் தடை விதித்தால் அது நியாயமல்ல என்று வீட்டிலுள்ளோர் கருதுவது நியாயமே.
ஆகவே வீட்டிலுள்ளோர் மற்றும் கல்விச்சாலைகள் நடத்துவோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதிக்காவண்ணம் சின்னத் தொலைபேசிகளில் மற்ற அனாவசியமான வசதிகளைக் குறைத்துவிட்டு இன்னும் மலிவாக செய்திப் பறிமாற்றத்துக்கு மட்டும் வசதியான சின்னத் தொலைபேசிகளைத் தயாரித்து அவைகளப் பயன் படுத்த ஆரம்பித்தால் அவைகளை உபயோகிக்க பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என்பது என் கருத்து. மற்றும் இக்காலத்தில் நவீன விஞ்ஞானக் கருவிகளை உபயோகிக்காதே என்று தடை போடுவது சரியான முறையல்ல. சில தாய்மார்கள் பிள்ளைகளை கணிணி உபயோகிக்க அனுமதிப்பதில்லை, ஏன் என்றால் கணிணியில் உலாவும் போது பல தேவையில்லாத தளங்களை பிள்ளைகள் பார்ப்பதன் மூலம் அவர்களின் மனம் கெட்டுவிடும் என்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதென்று கொண்டாலும், விஞ்ஞான வளர்ச்சிகளைப் புறந்தள்ளி நம் பிள்ளைகளை வளர்த்தால் அந்தப் பிள்ளைகள் வருங்காலத்தில் (ரன்னிங் பெல்ட்) என்று சொல்லக்கூடிய நவீன யுகத்தில் அனைவருக்கும் சரிசமமாகப் போட்டியிட முடியாதவர்களாக, இயலாதவர்களாக ஆகிவிடுவார்கள் அல்லவா? ஆகவே அவர்களை கணிணியை உபயோகிக்க அனுமதிக்காமல் இருப்பதைவிட அவர்கள் கணிணியை எப்படி முன்னேற்றத்துக்கு உபயோகிக்கலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி முறையாக கணினியை உபயோகிக்க அனுமதிக்கலாம். ஏனென்றால் கணிணியில் உலாவும்போது விரல்நுனியில் உலகம் என்று சொல்லுவதைப் போல உட்கார்ந்த இடத்திலிருந்து அவர்கள் பல அறிவுபூர்வமான செய்திகளை அறிந்து கொள்ள வசதிகள் இருக்கிறது.
விவசாயி பார்க்காத நிலம், முதலாளி மேற்பார்வை இடாத தொழில், பெற்றோர் கவனிக்காத பிள்ளைகள் எப்படிச் சரியாகத் தரம் வாய்ந்ததாக இருக்கும், ஆகவே நம் பிள்ளைகளுக்கு வேண்டிய விஞ்ஞான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு அவர்களை முறைப்படுத்த என்ன வழி என்று யோசித்து அவைகளைக் கடைபிடிப்பதே பெற்றோருக்கும், பள்ளிகள், கல்லூரிகள் நடத்தும் நிர்வாகத்தினருக்கும் கடமை என்பது நாம் உணர வேண்டிய ஒரு செய்தியாகும்.
அன்புடன்
தமிழ்த்தேனீ


