ஏன் இந்தத் தற்கொலை
தற்காலத்தில் பல இளம் வய்து ஆண்கள் பெண்கள் மரணத்தைத் தனக்குத்தானே தேடிக்கொள்கின்றனர். பத்திரிகையைத் திறந்தால் எதாவது ஒன்று இரண்டு நிகழ்வுகளாவது நம் கண்களில் விழுகின்றன. இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்தேன். கூட்டுக் குடும்பம் குறைந்ததின் காரணமாக இருக்குமோ? கூட்டுக் குடும்பத்தில் பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடுமபம், அவரது குழந்தைகள், அத்தைகள், வீட்டுத்தலைவராக தாத்தா, பாட்டி என்று பலர் இருந்தனர். இதனால் விட்டுக்கொடுக்கும் தனமையுடன் சகித்துப்போகும் குணம் வளர்கிறது. ஒருவர் மனம் கலங்க, மற்றொருவர் அவருக்கு ஆறுதல் கூற, இதயச் சுமை குறைந்து விடுகிறது. தியாக மனப்பான்மையும் தானாக வருகிறது.எல்லோரும் பகிர்ந்து உண்ணும் பழக்கமும், ஒருவர்க்கொருவர் உதவி செய்யும் குணமும் வருகிறது. பாசம் அன்பு பெருகுவதைப் பார்க்கிறோம். பெரியவர்கள் கண்டிப்புடன் பாசமும் காட்ட வளரும் சிறுவர்கள் புடம் போட்ட தங்கமாக நல்ல பண்புடன் குடிமகன்கள் ஆகிறார்கள். மாணவர்கள் காலேஜிலிருந்து வீடு வந்தால் அவர்களை வரவேற்கப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் பசிக்கு உணவும் மிகப் பாசத்துடன் அளிக்க அவன் மனம் நிரம்புகிறது. தன் பள்ளியில் நடந்ததை அவர்கள் ஆர்வத்துடன் விளக்க, மாமி, அத்தை, அம்மா என்ற பலர் அவைகளைச் செவி கொடுத்துக் கேட்க, அவர்களுக்கும் மனதில் உத்சாகம் பிறக்கிறது. ஒரே வயதில் பெரியப்பா பிள்ளை, சித்தப்பா பிள்ளை என்றும் இருக்க வாய்ய்பு இருப்பதால் மனம் விட்டுப்பேசப் பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.
இப்போது இருக்கும் சூழ்நிலை, கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்துக்குப் போகும் சூழ்நிலை. இதில் ஈகோ பிரச்சனை வேறு. அவர்கள் வேலையில் நன்கு சம்பாதிக்கின்றனர், ஆனால் அவர்களது குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தனித்து விடப்படுகின்றனர். அவர்கள் தனிமையை உணராமல் இருக்கப் பெற்றோர்கள் அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். இது தவறு, இது சரி என்று சொல்லிக்கொடுக்க ஒருவரும் இருப்பதில்லை. அந்த மகனுக்கும் எது கேட்டாலும் கிடைத்துவிடுவதால் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற அசுர ஆசையும், அதில் தோல்வி ஏற்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகின்றன. மனம் விட்டுச் சொல்ல ஒருவரும் இல்லாமல் உள்ளேயே புழுங்குகிறான். இதனால் மன அழுத்தம் (டிப்ரஷன்) உண்டாகிறது.
ஏமாற்றம் அவனைக் குடி, போதை மருந்து என்ற கெட்ட பழக்கத்தில் தள்ளுகிறது. கடைசியில் அவன் எடுக்கும் முடிவு தற்கொலை. இந்த வருடம் அதிகம் பேர் தூக்குப்போட்டுக் கொண்டதையும், விஷ மருந்து குடித்துச் சாவை வரவழைததுக் கொண்டதையும் NCRB (national crime records bureau) ரிபோர்ட் கொடுத்திருக்கிறார்கள். அதன்படி ஒரு மணிக்கு 14 பேர் தற்கொலை, 2007ல் 122637 தற்கொலை கேஸ்கள், அதில் பெண்கள் 43322, தமிழ்நாட்டில் 13811 கேஸ்கள், மற்ற எல்லா மாகாணங்களும் சேர்ந்து 57.9%, உத்தர் பிரதேஷில் தான் மிகக்குறைவு. தில்லி மிக அதிகம்.
இதன் காரணங்கள் காதலில் தோல்வி, பெண்களால் அல்லது ஆண்களால் ஏமாற்றம், உடலில் தீராத வியாதிகள், வறுமை, கடன், வரதட்சிணைக் கொடுமை, படிப்பில் தோல்வி, ஆபீஸில் உயர்வுத் தடுப்பு முதலியவை.
இதைத் தடுக்க வழிகள் என்ன? மனம் திறந்து பேச வேண்டும். அளவோடு ஆசை இருக்க வேண்டும். What என்று பதறாமல் SO WHAT? என்ற நிலை வர வேண்டும். நிறைய தியானம் செய்ய வேண்டும். திருமதி கிரண்பேதி அவர்கள் தில்லியில் திஹார் ஜெயிலில் பொறுப்பேற்று நடத்திய போது கைதிகளுக்கு தியானம் வகுப்பு அமைத்துக் கொடுத்தார். ஸ்ரீ மஹேஷ் யோகி அவர்களும் அங்கு தியான வகுப்பு எடுத்தார். நான் அங்கு சென்று பார்த்திருக்கிறேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தல், அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கை, எதையும் தாங்கும் இதயம், இவைகள் போன்றவைகளை வாழ்க்கையில் எற்றுக்கொண்டால் "மரணமே வா!" என்ற அழைப்பு நின்று விடும்.
அன்புடன்
அம்மம்மா விசாலம்


