சுதந்திரம் கிடைத்ததா?
வெள்ளையர்களின் ஏகாதிபத்யத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாடு, பல சுதந்திரத் தியாகிகளின் வியர்வையாலும் குருதியாலும் சுத்தம் செய்யப்பட்டு, சுதந்திர இந்தியாவாக உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் முடிந்து 61ம் ஆண்டு துவக்கத்தில் இருக்கிறோம் நாம். நாம் சுதந்திரமாய் வாழ எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கின்றனர்! அதெல்லாம் நமக்கு மறந்து விட்டது. சமீபத்தில் ஒருவர் கேட்டார், "இன்னும் எத்தனை காலத்துக்கு மீண்டும் மீண்டும் பேசியதையே பேசி காலத்தை வீணாக்குவீர்கள்? சுதந்திரம் வாங்கி 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூடக் கிடைக்கவில்லை. 90 சதவிகிகித மக்கள் இருக்க இடம் இல்லாமல், படுக்கப் பாய்கூட இல்லாமல், உண்ண உணவில்லாமல், அடிப்படைக் கல்விகூட அளிக்கப்படாமல், வாக்களிக்கும் உரிமைகள் அளிக்கப் படாமல், அடிப்படை வாழ்வாதாரம் என்னும் எதுவுமே கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்." என்று.
நம் நாடு உலக அரங்கில் என்ன தகுதியில் இருக்கிறது? விஞ்ஞான வளர்ச்சியில் நம் நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? பண வீக்கம் என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொண்டு எப்படி அவதிப்படுகிறது? கல்வித் தகுதியில், மக்களுக்குக் கல்வி அளிக்கும் தகுதியில் எந்தத் தரத்தில் இருக்கிறது? எத்தனை பேர் நிறைவாக வேலை கிடைத்து, பணம் சம்பாதித்து, தன் நிறைவு அடைந்திருக்கிறார்கள்? உலக அரங்கில் நம் நாடு தன்னிறைவு அடைந்திருக்கிறதா? நீராதாரங்கள் வளப்படுத்தப் பட்டிருக்கின்றனவா? விவசாயத்துறை முன்னேறியிருக்கிறதா? உணவு உற்பத்தி அதிகரித்திருக்கிறதா?
இப்படிப் பல கேள்விகளுக்கு இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்றுதான் பதில் அளிக்க முடிகிறது. இன்னும் மக்களுக்கு வேண்டிய மின்சாரத்தை அரசால் அளிக்க முடியவில்லை. சட்டங்களால் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. காலையில் பணிக்குச் செல்லும் இளைஞர்கள், யுவதிகள் மீண்டும் பாதுகாப்பாக வீட்டுக்கு முழுமையாகத் திரும்பி வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வீட்டில் காத்திருக்கும் பெற்றோர்கள், நுகர்வோர் உணவுப் பொருள் வினியோகக் கடைகளில் அனைவருக்கும் பொதுவாக உணவுப்பொருள் கிடைக்காத நிலை, அப்படியே கிடைத்தாலும் நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடான நல்ல பொருட்கள், தரமான பொருட்கள், சரியான அளவு கிடைக்கிறதா என்று பார்த்தால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
கல்வி மக்களுக்கு, அதுவும் நம் வருங்கால இந்தியர்களுக்கு, இளைஞர்களுக்குக் கல்வி இலவசமாகக் கிடைக்கிறதா? சரி, இலவசமாகக் கிடைக்க வேண்டாம், நியாயமான அளவு பணம் கொடுத்தாவது படிக்க முடிகிறதா? அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக் குறை, அப்படியே ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்கள் தங்கள் தகுதி உணர்ந்து பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கிறார்களா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
அப்படியே அந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் நாம் பாடுபட்டு, வியர்வை சிந்தி, சம்பாதித்த பணத்தைக் கொட்டி, தகுதிக்கு மீறிப் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலும், கடைசி வரை அந்தப் பள்ளி மூடாமல் இருக்குமா? அந்தக் குறைந்த அளவு வாக்குறுதியாவது அரசாங்கம் அளிக்கிறதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
யாரோ பணம் படைத்தவர்கள், அதிகார வர்கத்தின் கடைக்கண் பார்வை பட்டவர்கள், தங்களின் தனிப்பட்ட சொத்துக்களைப் பெருக்கப் பள்ளிகள் ஆரம்பித்து, நாட்டில் இருக்கும் பல விவசாய விளை நிலங்களை அனியாயமாக அடிமாட்டு விலைக்கு வளைத்துப் போட்டு ஆரம்பித்து, கட்டிட நிதி போன்ற பல நிதிகளை வசூலித்து மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு, தாங்கள் ஏகபோகமாக வளர்ந்து வரும் நிலைதான் உள்ளதே தவிர, தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்னும் நேர்மை கொண்ட கல்வி நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அப்படிப்பட்ட நிலை இருக்கும் நாட்டில் அடிக்கடி மாணவர்கள் அல்லாடும் காட்சியைப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிடும்போது மனம் பதைக்கும் மக்கள், அநியாயம் நடக்கும் போதும் தட்டிக் கேட்டால் அந்த நிறுவனங்களின் கைக்கூலிகள், அடியாட்களால் தாக்கப் படும் அபாயம் இருப்பதை உணர்ந்து நியாயம் கேட்கவே பயப்படும் மக்கள் இருக்கும் நாடு நம் நாடு. மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
நம்மால் வாக்களிக்கப் பட்டுப் பதவிக்கு அமர்த்தும் மந்திரிகள் நமக்காக, நம் வசதிக்காக, நாட்டு முன்னேற்றத்துக்காகப் பாடு படவேண்டும், அப்படி நடக்கிறதா? நாம் நம் வாக்குகளை சுதந்திரமாய் சென்று அளிக்க முடிகிறதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
மக்களின் உண்மையான சுதந்திரம் வந்து விட்டது என்றால், அண்ணல் காந்தி சொன்னது போல சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பெண் வெளியே சென்று பத்திரமாக வீட்டிற்குத் திரும்புகிறாள் என்றால் அப்போது நம்பலாம் நாமும் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதை. நாடு தற்போது இருக்கும் நிலையில் ஆண்களே பத்திரமாக வீடு வந்து சேர முடியவில்லை, கொள்ளையடிப்பவர்கள் போன்ற தீய சக்திகளிடமிருந்து தப்பி அவர்கள் ஈட்டும் பணத்தையே பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை. குடி தண்ணீருக்கும், அடுப்பெரிக்க உதவும் வாயு இணைப்புக்கும், மின்சார வசதிகளுக்கும், வாகனங்கள் ஓட்ட எரிபொருளுக்கும் நுகர்வோர் அங்காடிகளில் நமக்களிக்கும் உணவுப் பொருட்களுக்கும், அனைத்துக்குமே, நாம் அல்லாட வேண்டிய நிலையில் நாடு உள்ளது.
இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், சுதந்திர தினம் அன்று மட்டும் தேசக் கொடியை சட்டையில் குத்திக்கொண்டு, சுதந்திர தினம் கொண்டாடி விட்டால் சுதந்திரம் வந்து விட்டது என்று ஆகிவிடுமா? மக்கள் விழிப்புணர்வு என்று பெருகிறார்களோ, அன்றுதானே உண்மையான சுதந்திரம் வந்திருக்கிறது என்று பொருள்? சும்மா வரவில்லை இந்த சுதந்திரம்! எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் நம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி உயிர்த் தியாகம் செய்து, இந்த சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். ஜான்சி ராணி, கட்டபொம்மன், மருது பாண்டியர், பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, ராஜாராம் மோஹன்ராய், மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பகத்சிங், கொடிகாத்த குமரன், லாலா லஜபதிராய், வ.உ. சிதம்பரம் பிள்ளை, பாரதியார், சுப்ரமண்ய சிவா, சர்தார் வல்லபாய் படேல், ராஜாஜி, இன்னும் சுதந்திரத்துக்காக நமக்காக பாடு பட்ட அனைவரையும் ஒரு கணம் நினைத்து வேண்டிக் கொள்ளுவோம்.
நமக்கும் விழிப்புணர்வு அளிக்கும் படி நாமும் பாடு படுவோம், உண்மையான சுதந்திரம் வேண்டி.
மீண்டும் சுதந்திரம் வேண்டி,
அன்புடன்
தமிழ்த்தேனீ
